தூத்துக்குடி, அக். 12:தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் ரூ.3.15 லட்சம் மதிப்பிலான நகையை பெண் தவறவிட்ட நிலையில் அதை மீட்ட போலீசார் மீட்டு முறைப்படி உரியவரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி கோயில்பிள்ளைவிளையைச் சேர்ந்தவர் அந்தோனி. தொழிலாளி. இவரது மனைவி ஜெயலதா (45) நேற்று முன் தினம் தனது மகள் படிப்பிற்காக தனது 3 அரை பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக மட்டக்கடை பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். பூபாலராயர்புரம் பகுதியில் வந்தபோது நகை வைத்திருந்த கைப்பை எதிர்பாராத விதமாக தொலைந்து போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வடபாகம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ சிவகுமார், ஏட்டுக்கள் முருகேசன், திருமணி ஆகியோர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தொலைந்து போன நகையை போலீசார் முழுமையாக மீட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஜெயலதாவிடம் முறைப்படி நேற்று ஒப்படைத்தனர். நகையைப் பெற்றுக்கொண்ட ஜெயலதா மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
+
Advertisement