வைகுண்டம், டிச.11:ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பினை நீர்வளத்துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினர் அதிரடியாக அகற்றினர்.
வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தோட்டம் அமைத்திருந்தார். இதனை அகற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடமும் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றினர். இந்நிலையில் அந்த பகுதியில் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மீண்டும் கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வைகுண்டம் தாசில்தார் தாஹிர் அகமது தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிவராஜன் தலைமையிலான நீர்வளத் துறையினரும் நேற்று முன்தினம் மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் அப்பகுதியில் நடப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகளையும் அகற்றினர். 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


