திருச்செந்தூர்,அக்.11: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 27ம் தேதி (திங்கள்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத்தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக நவம்பர் மாதம் 8ம் தேதி 2ம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement