கோவில்பட்டி, டிச. 9: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவி காலம், கடந்த செப்.7ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ராஜகுரு, திருப்பதி ராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், நிருத்திய லட்சுமி ஆகியோர் அறநிலையத்துறையினரால் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் மற்றும் பதவியேற்பு விழா, கோயில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி முன்னிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜகுரு வெற்றி பெற்று, அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், கோயில் தலைமை எழுத்தர் மாரியப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அறங்காவலர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement


