கோவில்பட்டி, செப். 9: ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எடை குறையாமல் வழங்க கடந்த சில மாதங்களாக புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடையில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பிஓஎஸ் மெஷினுடன் ‘புளூடூத்’ மூலம் இணைத்து, பில் போடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி செய்வதால் ஒரு கிராம் எடை குறைவாக இருந்தாலும், பில் போட முடியாது. இதன் மூலம் கார்டுதாரர்களுக்கு ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த திட்டத்தின் மூலம் பல நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருவதாக, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்புதிய முறையால் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் பல மணி நேரம் காத்துகிடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி லெட்சுமணன் (55) என்பவர் நீண்ட நேரமாக வரிசையில் நின்றுள்ளார். திடீரென அவர் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து மயக்கத்தினை தெளிய வைத்து அவரை சிகிச்சைக்காக ஆட்டோ மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே முன்பு ஒரு நாளைக்கு 100 முதல் 150 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கிய நிலையில் தற்போது புதிய நடைமுறையால் 50 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கக்கூடிய நிலை இருப்பதால் ஓரிரு நாள் அலைந்து தான் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
+
Advertisement