சாத்தான்குளம், அக். 8: சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் சாஸ்தா கோயில் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி (74). பன்னம்பாறை மருதமலை அய்யனார் சாஸ்தா, சுடலை ஆண்டவர் கோயில் தர்மகர்த்தாவாக இருந்துவருகிறார். கடந்த 5ம் தேதி அவருக்கு செல்போனில் அழைத்துப்பேசிய அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர், சாஸ்தா கோயில் கிரில் கேட் மற்றும் பூட்டு உடைபட்டு கிடப்பதாகவும், அருகே நின்ற வாலிபர் ஒருவர் பைக்கை விட்டுவிட்டு தப்பிச்சென்றதாகவும் கூறினார். அதன்பேரில் ரங்கசாமி கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு கிரில் கேட் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அதில் நின்ற பைக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்நிலையில் நேற்று காலை வாலிபர் ஒருவர் கோயிலை சுற்றி வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற ரங்கசாமி, அந்த வாலிபரிடம் விசாரித்த போது காணாமல் போன தனது பைக்கை தேடி வந்ததாகத் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரங்கசாமி இதுகுறித்து சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் விரைந்துவந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் விளாத்திகுளம் வேம்பார் மேலத்தெருவைச் சேர்ந்த குருசாமியின் மகன் முத்துராமன் (35) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது மதுரை, குளத்தூர் சூரங்குடி , உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும்திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், முத்துராமனை கைதுசெய்ததோடு பைக்கை பறிமுதல் செய்தனர்.