தூத்துக்குடி,ஆக.8: தூத்துக்குடியில் தனியார் ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு வெளியேறிய சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான ஐஸ் பிளாண்ட், ஜான் சேவியர், நகர் மீனவர் காலனி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஐஸ் ஆலையில் முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் அடிக்கடி அம்மோனியா வாயு வெளியேறி அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆக. 5ம்தேதியன்று இரவு அந்த ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், லேசான மூச்சுதிணறல், வாந்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து மக்கள் இரவோடு இரவாக தங்களது உறவினர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அம்மோனியா வாயு பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து ஐஸ்பிளாண்ட் உரிமையாளரான ஒயிட் என்பவர் மீது அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இருந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.