தூத்துக்குடி, அக். 7: தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், 2021ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வுபெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மண்டலம் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பெனிஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் தம்பிராஜ், கவுரவ பொதுச்செயலாளர் ஜேசுராஜன், மாவட்ட துணை தலைவர்கள் முத்துகிருஷ்ணன், வேல்ராஜன், மாவட்ட செயலாளர் இணை செயலாளர்கள் ஆறுமுகம், முருகானந்தம், ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகள் கெங்கராஜ், ராஜேந்திரன், சண்முகவேல், அந்தோணிசாமி, ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது இன்று முதல் (7ம் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.