உடன்குடி, டிச. 6: திருநெல்வேலி, தூத்துக்குடி நாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் பெரிய பூ மார்க்கெட்டுகள் உள்ளன. பூ கட்டுவதற்கு பயன்படும் சம்பு என்ற நார், கழிவுநீர்கள் செல்லும் ஓடை, வடிகால் வாய்க்கால்கள் என ஆங்காங்கே ஆள் உயரத்திற்கு அதிகளவில் வளர்ந்துள்ளது. தற்போது பருவமழை பெய்துள்ளதால் சம்பு நார்களின் வளர்ச்சி பெரியளவில் உள்ளது. இதையடுத்து நாகர்கோவில் பகுதியில் உள்ள வியாபாரிகள், தொழிலாளிகள் உள்ளிட்டோர் குரும்பூர் பகுதியில் முகாமிட்டு லோடு ஆட்டோ, லாரிகளில் சம்பு நாரை ஏற்றிச் செல்கின்றனர். இங்கிருந்து கொண்டு செல்லப்படும் சம்பு நாரை பக்குவப்படுத்தி காய வைத்து பின்னர் நாராக விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த தொழிலாளி யாசின் கூறுகையில், பூ கட்டும் நாறுக்கு பயன்படும் சம்பு என்ற செடி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் கிடைத்தாலும் இங்கு சீசன் இல்லாத நாட்களில் திண்டுக்கல், மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கியிருந்து அதனை வெட்டி எடுத்து விற்பனைக்காக கொண்டு செல்வோம். இதுதான் எங்களுக்கு தொழில். நாங்கள் 5 பேர் உள்ளோம். ஒரு லோடு கொண்டு சென்றால் ஆளுக்கு ரூ.800 முதல் ரூ.1000 ரூபாய் வரை கிடைக்கும், என்றார்.

