ஓட்டப்பிடாரம், நவ. 5: நாகம்பட்டி, கே.துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளின் பேரில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கவும், பேவர்பிளாக் சாலை மற்றும் சிமெண்ட் சாலை, சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட கிராம மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பசுவந்தனையை அடுத்த நாகம்பட்டி கிராமத்திலும் ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்கள், ஒட்டுமொத்தமாக சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு தேவையான அளவிற்கு குடிநீர் கிடைப்பதில்லை என முறையிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசிவிஸ்வநாதன், எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துக்குமார், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி முத்துராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலமுருகன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
