Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாத்தான்குளம் அருகே ஏசி மெக்கானிக்கின் வீட்டை சூறையாடிய டிரைவர் கைது

சாத்தான்குளம், ஜூலை 31: சாத்தான்குளம் அருகே ஏசி மெக்கானிக்கின் கார் மற்றும் வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் ஜெகநாதன் (35). பெங்களூரில் கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ராஜா எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு சங்கரன்குடியிருப்பு தெற்குத் தெருவைச் சேர்ந்த பொன்ராஜின் மகனான அகிலன் என்பவரது வீட்டில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக அகிலனின் வீட்டு முன்பாக உள்ள மின்கம்பத்தில் மீது ஏறி ராஜா வேலைபார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அகிலனுக்கும், ஜெகநாதனுக்கும் இடையே விரோதம் உருவானது.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெகநாதன் ஊர் திரும்பியபோது மின்சாரம் தாக்கி ராஜா உயிரிழந்தது தொடர்பாக அகிலன் தரப்பில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டதாக ஊர்த்தரப்பினர் கூறினர். இதுகுறித்து தெரியவந்த ஜெகநாதன், விவரம் கேட்பதற்காக கடந்த 27ம் தேதி அகிலனின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு அகிலன் இல்லாததால் ஆத்திரமடைந்த ஜெகநாதன், அகிலனின் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அகிலனின் கார் மற்றும் வீட்டு ஜன்னல்களை அடித்து சேதப்படுத்தி சூறையாடினார். மேலும் அகிலனின் பெற்றோருக்கும் கொலைமிரட்டல் விடுத்துச் சென்றாராம். இந்த தாக்குதல் சம்பவத்தில் அகிலனுக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே அகிலனின் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை ஜெகநாதன் அடித்து உடைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துஅகிலன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், தாக்குதலில் ஈடுபட்ட ஜெகநாதனை கைது செய்தார்.