Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீன்பிடி, உப்பு, பனை தொழிலாளர்கள் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழாவில் 3வது நாளான நேற்று மீன்பிடி, உப்பு, பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் இறைமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உலகளவில் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆக.5ம் தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

3வது நாளையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2வது திருப்பலி நடந்தது. காலை, 6.30 மணிக்கு புனித அந்தோனியார் ஆலய இறைமக்கள், திருச்சிலுவை சபை அருள் சகோதரிகள், திருச்சிலுவை ஆங்கில மற்றும் தமிழ் பள்ளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 7.30 மணிக்கு திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசியத் துறவிகளும், கல்வி நிறுவனங்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 8.30 மணிக்கு அலங்காரத்தட்டு பங்கு இறைமக்கள், புனித கார்மேல் அன்னை அருள் சகோதரிகளுக்கான திருப்பலி நடந்தது. காலை 9.30 மணிக்கு லசால் அருள் சகோதரர்கள் மற்றும் லசால் மேல்நிலைப்பள்ளி ஆகியோர்களுக்கான திருப்பலி நடத்தப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு மீன்பிடி, உப்பு ஆலை, பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு திருப்பலியானது கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பங்கு இறைமக்கள் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடந்தது.

இதனிடையே வரும் ஆக. 3ம் தேதி காலை 7.30 மணிக்கு புதுநன்மை திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆக. 4ம் தேதி மாலை 5.30 மணிக்கு கர்தினால் அந்தோனி பூலா தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெறும். விழாவின் சிகரமான ஆக. 5ம் தேதி காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்கு தந்தை பிரவீன்ராசு, களப்பணியாளர் மிக்கேல் அருள்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். புதிய பாலம் கட்டும் இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பாலம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் கொட்டித் தீர்த்த அதி கனமழை மற்றும் வெள்ளத்தின்போது தூத்துக்குடியில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏறப்ட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மழைநீரை வெளியேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அப்போது, திருவிகநகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக தூத்துக்குடி துறைமுக சாலையில் மீன்வளக்கல்லூரியின் எதிர்புறம் உள்ள பாலம் இடிக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பாலம் கட்டுவது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பனோத் ம்ருகேந்தர் லால், தலைமை பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசுவாமி, முத்தையாபுரம் பகுதி திமுக செயலாளர் மேகநாதன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி ஓட்டலில் ரகளை செய்தவர் கைது கோவில்பட்டி, ஜூலை 29: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரயில் நிலைய சாலை அருகில் பிரகாஷ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்த கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ், அவரது நண்பரான புதுக்கிராமம் கிராமத்தைச் சேர்ந்த சவுபர்சாதிக் ஆகிய இருவரும் உணவு பார்சல் கேட்டனர். அதன்பேரில் உணவு பார்சலை இருவரிடமும் கொடுத்த ஓட்டல் ஊழியர் அதற்கான பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், ‘மாப்பிள்ளே நம்மகிட்ட பணம் கேட்டா அவ்வளவு தான் எனக் கூறியவாறு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தரையில் தீப்பொறி பறக்கும் வகையில் உரசியது மட்டுமின்றி ரகளையில் ஈடுபட்டார். அதேவேளையில் சிந்தாமணி நகரைச் சேர்ந்த கணேஷ்பாண்டி என்ற இரும்பு கடை தொழிலாளி அந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, வெளியே நின்று கொண்டிருந்தத நிலையில் அவரையும் வெங்கடேஷ் திடீரென தாக்கத் துவங்கினார்.

அப்போது அருகில் நின்று கொண்டிருந்த சவுபர்சாதிக் நல்ல தாக்கு என கூறியவாறு ரகளையில் ஈடுபட்டாராம். இதில் வெங்கடேஷ் தாக்கியதில் கீழே விழுந்து காயமடைந்த கணேஷ்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அழைத்துச்சென்றனர். இந்நிலையில் இங்கே எல்லாமே நாங்க தான் என அலப்பறையாக குரல் எழுப்பியபடி வெங்கடேஷ், சவுபர் சாதிக் ஆகிய இருவரும் அங்கிருந்து சென்றனர். இதனிடையே காயமடைந்த கணேஷ்பாண்டி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், சவுபர் சாதிக்கை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளியான வெங்கடேசை தேடி வருகின்றனர்.