தூத்துக்குடி, ஆக. 11:தூத்துக்குடியில் நடந்து வரும் துடிசியா தொழில் கண்காட்சியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்தூத்துக்குடியில் துடிசியா என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்ட சிறு,குறு தொழில் சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூத்துக்குடியில் தொழில் கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான துடிசியா தொழில் கண்காட்சி தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் திருமண்டபத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது இக்கண்காட்சியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சிறு, குறு தொழில் துறை அரசு செயலாளர் அதுல் ஆனந்த், கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர்லால் ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கண்காட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழிற்சாலைகள் பங்குபெற்று, தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருள்களை காட்சிபடுத்தியுள்ளனர். மேலும் விற்போர், வாங்குவோர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட் அப் புரோகிராம், ஏற்றுமதி, இறுக்குமதியாளர்களுக்கான கருத்தரங்குகள் நடந்து வருகின்றன. இதில் வாங்குவோர், விற்போர் கருத்தரங்கில் வ.உ.சி துறைமுகம், கூடங்குளம் அனுமின் நிலையம், ஐஎஸ்ஆர்ஓ, டிசிடபிள்யூ, ஸ்பிக், என்டிபிஎல், டிஎம்பி மற்றும் பல நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அரசுத் துறைகளான சிட்கோ, எஸ்ஐடிபிஐ, எம்எஸ்எம்இ, டிஐஐசி, டிக் போன்றவை மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தொழிற்சாலைகளும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.