திருத்துறைப்பூண்டி,நவ.22: ரயில்வே, அஞ்சல் துறையில் காலியிடங்களை ஒன்றிய அரசு நிரப்ப கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வரும் 25ம்தேதி முற்றுகை போராட்டம் நடத்துகிறது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளதாவது:
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனே நிரப்பிட வேண்டும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே நிரப்பிட வேண்டும், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கிட வேண்டும்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட (தற்காலிக) பணியிடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பிட வேண்டும், வருவாய்துறையில் கிராம உதவியாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் அமைப்பாளர்,
உதவியாளர் மற்றும் சமையலர் பணியிடங்களுக்கு பணம் வாங்காமல் தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி வரும் 25ம் தேதி திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


