மன்னார்குடி, நவ. 21: போலியோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மன்னார்குடியில் ரோட்டரி சங்கங்கள் சார்பில், போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக ராஜகோபால சுவாமி கோவில் அருகில் இருந்து ரோட்டரி உதவி ஆளுநர்.வெங்கடேஷ் முன்னிலையில் துவங்கிய பேரணியை டிஎஸ்பி மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியின் நோக்கம் குறித்து போலியோ பிரிவு தலைவர் சிவச்சந்திரன் பேசினார்.
போலியோ இல்லாத உலகம் படைப்போம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவோம், ஊனம் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம் என்பன போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்த வாறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது. பேரணி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர்கள் கருணாகரன், சிவபாலன், அமர்நாத் செய்திருந்தனர். நிறைவில், மண்டல செயலர் சிவக்குமார் நன்றி கூறினார்.


