திருவாரூர், நவ. 18: எஸ்.ஐ.ஆர் பணிக்கு போதுமான கால அவகாசம் வழங்கக்கோரி திருவாரூரில் நேற்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.ஐ.ஆர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கவேண்டும், அவசரம் என கூறி பணி நெருக்கடியினை ஏற்படுத்துவதை தவிர்க்கவேண்டும், தேர்தல் பணிகள் மேற்கொள்ள போதிய பயிற்சியினை வழங்கிட வேண்டும், போதிய தன்னார்வலர்களையும், கூடுதலாக அரசு பணியாளர்களையும் ஈடுபடுத்திட வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தினை மதிப்பூதியமாக வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மேற்படி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


