திருவாரூர், அக். 18: திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஒரு வருட சான்றிதழ் படிப்பிற்கு மாணவர்கள் நேரடி சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2025-26-ம் கல்வியாண்டிற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, ஒரு வருட சான்றிதழ் படிப்பாக அவசர சிகிச்சை டெக்னீஷியன், மயக்க மருந்து டெக்னீஷியன், தியேட்டர் டெக்னீஷியன், எலும்பியல் டெக்னீஷியன், வீட்டு சுகாதார பராமரிப்பு ஆகும். மாவட்டத்திலுள்ள மொத்த காலியிடங்கள் 63ல் 38 இடங்கள் தற்போது காலியாக இருப்பதால் இந்த இடங்களுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் www.tmcvr.tn.gov.in என்ற வலைதளத்திலும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இதற்கு தகுதிகளாக வரும் 31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாக, 10ம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளி ப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

