திருவாரூர், அக். 17: திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 96 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. ஏலத்தொகை வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மது கடத்தல் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி கருண்கரட் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டன.இதில் 90 இருசக்கர வாகனங்களில் 89 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன. இதேபோல் 11 நான்குசக்கர வாகனங்களில் 7 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்களும் என மொத்தம் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் கிடைக்கபெற்ற ஏலத்தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.