திருவாரூர், அக். 13: இஸ்ரேல் அரசை கண்டித்து திருவாரூரில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்படுகொலையை நடத்தி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், உடனடியாக தாக்குதலை நிறுத்த கோரியும், இஸ்ரேலுக்கு துணை போகும் அமெரிக்காவை கண்டித்தும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.
இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை இந்தியா கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளர் கோபி மற்றும் பொறுப்பாளர்கள் பாக்யராஜ், கார்த்திக், பழனிவேல், ஸ்ரீதரன், சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.