திருத்துறைப்பூண்டி, நவ. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச அறிவியல் தினம் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி சர்வதேச அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் முக்கிய பங்கு எடுத்துரைக்கவும், அறிவியல் பூர்வமான விவாதங்களில் பொதுமக்களை ஈடுபடுத்தவும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச அறிவியல் தினம் என்று கூறினார். முன்னதாக ஆசிரியை ரேணுகா வரவேற்றார். ஆசிரியை தனுஜா பேசுகையில், அறிவியல் தினத்தின் முக்கிய இலக்குகளாக அறிவியல் அறிவு மற்றும் ஆராய்ச்சியில் நாடுகளுக்கிடையேயான தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் அறிவியல் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் அறிவியல் முயற்சிகளுக்கு ஆதரவை திரட்டுதல் என்று விளக்கினார். முடியில் ஆசிரியர் சத்யா நன்றி கூறினார். சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
