மன்னார்குடி, அக்.10:கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிக மாக காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், பல கிராமங்களில் புகையான் நோயால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாதிப்பு பொருளாதார சேத நிலையை விட அதிகமாக உள்ளது.
ஏற்கனவே விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடிக்கு அதிக அளவு செலவு செய்துள்ள நிலையில் தற்போது புகையான் நோய் தாக்குதலால் பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து காரியமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக புகையான் நோய் தாக்கியுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை களை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோட்டூர் ஒன்றியத்திற்கு என நிரந்தரமாக வேளாண் உதவி இயக்குனரை உடன் நியமிக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றனர்.