திருவாரூர், ஆக. 9: திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் இருந்து வரும் காலி பணியிடங்களுக்கு தன்னார்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ் .பி தெரிவித்துள்ளார்.இது குறித்த வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்து வரும் ஆண் 11 மற்றும் பெண் 6 என மொத்தம் 17 இடங்களை நிரப்புவதற்கு தன்னார்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் மாவட்டத்தின் முத்துப்பேட்டை பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணி புரிவதற்கு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி ஊர்காவல் படைக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 45 வயதிற்குள்ளும், நல்ல உடல் தகுதியுடனும், குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் ஆய்வாளர் அலுவலகத்தில் நேரடியாக வரும் 18ந் தேதி முதல் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதே அலுவலகத்தில் வரும் மாதம் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு எஸ்.பி. கருண்கரட் தெரிவித்துள்ளார்.