வலங்கைமான், ஆக.9: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும் பண்ணையூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முகாமினை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும் பண்ணையூர் புனித அருளப்பர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேரில் பார்வையிட்டு, வருவாய்த்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இருப்பிட சான்றிதழும், 1 பயனாளிக்கு ஜாதி சான்றிதழும், 1 பயனாளிக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள்; துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லப்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் அமுதா, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.