மன்னார்குடி, ஜுலை 29 : மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா. கோபாலா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மன்னார்குடி பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, செங்கமலத்தாயார் ஒவ்வொரு நாளும் அன்ன, வெள்ளி, சேஷ, சிம்ம, கருட, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வந்தார்.
இந்த நிலையில், ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், முன்னாள் அமைச்சர் காமராஜ், கோயில் செயல் அலுவலர் மாதவன் உள்பட ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோபாலா கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.