Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் மோகனசந்திரன் தகவல்

திருவாரூர், ஜுலை 29: திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மாதாந்திர உதவிதொகை பெற தங்களது பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மிகவும் எளிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் 2 பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் ரூ 2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இந்தஅறிவிப்பிற்கிணங்க, 2 பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்துவரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை அன்புகரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின் அக்குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருத்தல் அல்லது சிறையில் இருத்தல் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்துவருபவராக இருந்தால் அவர்களது குழந்தைகள் தகுதியுடையவர்கள் ஆவார்.

எனவே தகுதியுடைய குழந்தைகள் குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், வயது சான்று நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் ஆவணங்களுடன் அன்புகரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அல்லது மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கலெக்டர் அலுவலக இணைப்புகட்டிடம், திருவாரூர் 610 004 ஆகியோரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.