Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி தகுதி தேவையில்லை அண்ணல் அம்பேத்கர் திட்டத்தில் எஸ்சி, எஸ்டியினர் கடன் பெறலாம்

திருவாரூர், ஆக. 12: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தில் தொழிற்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களைப் பெறுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவைத் தொழில்கள் மற்றும் உற்பத்தி ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை. இத்திட்டத்தில் விண்ணப்பிக்ககல்வித் தகுதி தேவையில்லை.

வயதுவரம்பு 55 வரை ஆகும். இத்திட்டத்தில் புதிய மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் கடன் வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இயந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணினி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் மேற்காணும் இத்திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டதொழில் மைய பொதுமேலாளர் அலுவலகத்தினை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.