திருவாரூர்,நவ.28: திருவாரூரில் லாரி மோதிய சம்பவத்தில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா கொளப்பாடு அருகே உள்ள சென்னியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதம் (72). இவர் நேற்று மாலை தனது பைக் மூலம் சொந்த வேலையாக திருவாரூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே பைக்கின் பின்னால் சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் முதியவர் சண்முகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் விபத்து குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

