Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன மழை வரப்போகுது, பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அரசு அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர், நவ. 27: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து துறை அரசு அலுவலர்களும் தயார் நிலையில் தலைமையிடத்தில் இருந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று (27ந்தேதி) முதல் 30ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதில் 28 மற்றும் 29ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் டி.ஆர்.ஒ கலைவாணி உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் மோகனசந்திரன் பேசியதாவது: வானிலை மையம் அறிவிப்பின்படி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை பாதிப்புகளை தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் முந்தைய ஆண்டுகளில் பொழிந்த மழை, வெள்ளத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள், நிவாரண முகாம்கள் அமைப்பது ஆறுகளின் கரைகளை கண்காணிப்பது, பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைகடைகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக உணவு பொருட்களின் இருப்புகளை ஒரு மாத காலத்திற்கு அதிகமாக வைத்துக்கொள்வது, சாலைகள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் தேங்காதவாறு மழைநீர் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுப்பது, தேவையான அளவில் மணல் மூட்டைகள், சவுக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைப்பது போன்ற பணிகளில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும் வருவாய்த்துறையின் சார்பில் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் எதிர்வரும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுடன் தலைமையிடத்தில் தங்கி பணிபுரிய வேண்டும். இதேபோல் கிராம நிர்வாக அலுவலர்களும் தங்களது பொறுப்பு கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும். முத்துப்பேட்டையில் இருந்து வரும் புயல் பாதுகாப்பு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மின்சாரம், குடிநீர் தங்குதடையின்றி கிடைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மாவட்டத்தில் இயங்கி வரும் 8 அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாம்பு கடி உள்ளிட்ட விஷ பூச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதை உயர்அலுவலர்கள் ஆய்வு செய்து மருத்துவர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான அளவு தார்ப்பாய்கள் கையிருப்பு வைத்திருக்க அறிவுரை வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்வதற்கும் பாதுகாப்பாக வைப்பதற்கும் உத்தரவிடபடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வழித்தட வரைபடங்களை அலுவலர்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். குறிப்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை அதற்குரிய பதிவேட்டில் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. மொத்தத்தில் கனமழை பாதிப்புகளை தடுப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் தலைமையிடத்தில் இருந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.