திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் உதவித்தொகைபெற விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமை திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் மாதம்தோறும் ரூ.7 ஆயிரத்து 500-ம், மருத்துவப்படி ரூ.500-ம் என ரூ 8 ஆயிரம் உதவித் தொகையானது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது.
மேலும் அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு உதவிதொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர் அவரின் கணவர் அல்லது மனைவிக்கு அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2,500 மற்றும் மருத்துவப் படி ரூ.500- என வழங்கபடுகிறது.
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-26ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பிக்கத் தகுதிகளாக 01.01.2025ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்), தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணவன் அல்லது மனைவி இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் 2வது தளத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்படி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17ந் தேதிக்குள் நேரிலும், https://tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளத்திலும் பதிவேற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.