Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க தேர்தல்

திருவாரூர், டிச. 11: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்கங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 667 தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அதன்படி இந்திய அளவிலும், மாநில அளவிலும் தொழிற்சங்கங்கள் இயங்கி வரும் நிலையில் இந்த தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்திற்காக அவ்வப்போது தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டப்படி 51 சதவிகிதத்திற்கு குறையாமல் வாக்குகளை பெரும் தொழிற்சங்கம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தொழிற்சங்க தேர்தல் என்பது தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க தேர்தல் என்பது கடைசியாக கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் தொழிற்சங்கத்திற்கான அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு சில சங்கத்தினர் நீதிமன்றத்தை நாடியதையடுத்து நீதிமன்ற உத்தரவு படி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்புடைய தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அதிமுக சார்புடைய அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்தல் என்பது திருவாரூர் -& மன்னார்குடி சாலையில் இருந்து வரும் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகத்தின் முதல் நிலை மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் மன்னார்குடி மேலாளர் அலுவலகம் என 2 இடங்களில் நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறையை சேர்ந்த அலுவலர்கள் முன்னிலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற்ற இந்த தேர்தலில் திருவாரூரில் மொத்தம் இருந்து வரும் 957 வாக்குகளில் 820 வாக்குகளும், மன்னார்குடியில் 997 வாக்குகளில் 847 வாக்குகளும் என மொத்தம் 1667 வாக்குகள் பதிவான நிலையில் நேற்று இரவே இந்த வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டு தொழிற்சங்கங்களுக்கு கிடைத்துள்ள வாக்குகள் குறித்து நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் நீதிமன்றம் மூலமாக முடிவுகள் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.