தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு இடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு திருவண்ணாமலைக்கு வரும் 14ம் தேதி வருகை
செங்கம், டிச. 11: திருவண்ணாமலை மாவட்டத்தில் வடக்கு மண்டலத்தில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் பகுதியில் கலைஞர் திடலில் வரும் 14ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான மேல் செங்கம் பகுதி வழியாக வருகை தர உள்ளார்.
இதனால் மேல் செங்கத்தில் முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு மேல் செங்கம் பகுதியில் வரவேற்பு அளிக்க உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், கட்சியினர் பாதுகாப்புடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ஏழுமலை, செந்தில்குமார், நகர செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராமஜெயம், மாவட்ட அணி நிர்வாகிகள் கட்டமடுவு சேட்டு, ஸ்ரீதர், அப்துல்வாஹித், பன்னீர்செல்வம், புகழ், ஒன்றிய நிர்வாகிகள் சீனிவாசன், பாலு, செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், நல்லமுத்து, முருகமணி, சந்தியா, ராபின்சன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


