Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது

திருவள்ளூர், அக்.30: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026னை கீழ்க்கண்ட கால அட்டவணையின்படி, அமல்படுத்த உத்திரவிட்டுள்ளது. வரும் நவம்பர் 3ம்தேதி வரை படிவங்கள் அச்சிடுதல் மற்றும் பயிற்சி, 4.11.2025 முதல் 4.12.2025 வரை வீடுதோறும் கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கும் பணி நடைபெறவுள்ளது. 9.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், 9.12.2025 முதல் 8.1.2026 வரை உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம். 9.12.2025 முதல் 31.01.2026 வரை விசாரணை அறிவிப்பு சார்பு செய்தல், விசாரணை மற்றும் சரிபார்ப்பு. 7.2.2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்.

அதன்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள 35.82 லட்சம் வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் அந்தந்த வாக்காளர்கள் வசிக்கும் இல்லங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக 4.11.2025 முதல் 4.12.2025 வரை கொடுத்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படும். மேற்படி, கணக்கெடுப்பு படிவத்தில் வாக்காளரது பெயர், புகைப்படம், மாநிலம், தொகுதி, பாகம் எண் மற்றும் பாகத்தில் வரிசை எண் அதில் அச்சிடப்பட்டிருக்கும் அப்படிவத்தில் அதற்குரிய இடத்தில் வாக்காளர் அவரது பிறந்ததேதி, கைபேசி எண், தந்தை பெயர், தாயார் பெயர் மற்றும் ஆதார் எண் குறிப்பிட வேண்டும்.

மேலும், வாக்காளர் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அதாவது அவர் 2002-2005ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பின் அப்பட்டியலின் தொகுதிஎண், பாகம்எண், வ.எண். இதனை www.elections.tn.gov.nல் பெறலாம் ஆகியவற்றுடன் பெயர் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் வாக்காளர் 40 வயதுக்கு குறைவாகவோ அல்லது 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வாக்காளரின் தந்தை அல்லது தாயார் அல்லது உறவினர் பெயர் மேற்படி வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவர்களின் பெயர், தொகுதி எண், பாகம் மற்றும் வரிசை எண் ஆகியவற்றினை படிவத்தில் பூர்த்தி செய்து வழங்கலாம்.

அவ்வாறு மேற்படி உறவினர்களின் பெயர் இல்லாவிடிலும், படிவத்தில் நாளது புகைப்படத்துடன் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 4.12.2025க்குள் வழங்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவேற்றம் செய்யலாம். மேற்படி வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை அடிப்படையாக கொண்டு 9.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், மேலும், 2002-2005 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் வாக்காளர் பெயரோ அல்லது அவரது உறவினர் பெயரோ வழங்காத பட்சத்தில், அவ்வாக்காளர்கள் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து 9.12.2025 முதல் 31.1.2026 வரை தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை செய்து இறுதி உத்திரவு பிறப்பிக்கப்படும்.

மேலும், 9.12.2025 முதல் 8.01.2026 வரையிலான காலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான படிவங்கள் 6 மற்றும் 7 பெறப்படும். மேலும், இந்த சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் தேர்தல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முழுமையாக பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகுமார், அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்டத் தலைவர்கள் (காங்கிரஸ்) லயன் ஆர்.எம்.தாஸ், (பாஜக) எம்.அஸ்வின் என்கிற ராஜசிம்மம் மகேந்திரா, (விசிக) தளபதி சுந்தர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், வேப்பம்பட்டு எஸ்.ஜெயபாலன், ஜெயபாரதி, பொதுக்குழு உறுப்பினர் ப.சிட்டிபாபு, நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் பி.கே.நாகராஜ், வினோத், கோபி, வழக்கறிஞர்கள் வி.எஸ்.சதீஷ், பாஸ் முருகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.