Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கந்த சஷ்டி விழா நிறைவு நாளான நேற்று திருத்தணி முருகன் கோயிலில் உற்சவருக்கு திருக்கல்யாணம்: கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

திருத்தணி, அக்.29:திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி சண்முகருக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. விழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றன. காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற்றது.

விழாவில், நேற்று முன்தினம் மாலை 5 டன் மலர்களால் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில், 7ம் நாளான நேற்று விழா நிறைவாக உற்சவர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். திருக்கல்யாணத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் குவிந்தனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மற்றும் பக்தர்கள் பட்டு வஸ்திரங்கள் மலர்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம் தாலிக்கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். திருக்கோயில் அர்ச்சகர்கள் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. காவடி மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்று பக்தி முழக்கங்களுடன் திருக்கல்யாண கோலத்தில் அருள் பாலித்த வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், தாலிக்கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 திருவள்ளூர்: திருவள்ளூர் சென்னீர்குப்பம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வள்ளி, தேவசேனா சமேத  சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, கடந்த 22ம்தேதி கந்த சஷ்டிவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, 8 மணியளவில் மயில்வாகன உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், யாகம், கேடய உற்சவமும், மாலை 7 மணியளவில் தெய்வானை திருமணமும் நடைபெற்றது. பிறகு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்று (29ம்தேதி) காலை சிறப்பு அபிஷேகமும் யாகம், கேடய உற்சவமும், மாலை 7 மணியளவில் வள்ளி திருமணமும் மற்றும் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், 30ம்தேதி பூத வாகனத்தில் திருவீதி உலாவும், 31ம்தேதி கைலாச பாதம் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், அறங்காவலர்கள் தோகை சுப்ரமணியன், ஜெயசெல்வி ராஜ்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் சிவா விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகன்-வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன்-வள்ளி-தெய்வானை, சிவன், பார்வதி, ஐயப்பன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவரான முருகர்-வள்ளி-தெய்வானை ஆகிய சாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்து பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது.