பெரியபாளையம், செப்.26: பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில், 10வது வாரமான நேற்று முன்தினம் உள்ளூர் மக்களின் 35ம் ஆண்டு திருவிழா நடந்தது. திரவுபதி அம்மன் கோயிலில், பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தியும், உடலில் அழகு குத்தியும் ஊர்வலம் வந்தனர். சிலர் காவடி எடுத்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்தது. முக்கிய வீதிகளில் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
+
Advertisement