ஆவடி, செப்.26: ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு ராமதாஸ்புரம் பகுதியில் 500கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கான குடிநீர் திருநின்றவூர் நகராட்சி சார்பில் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீட்டுத் தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் பரிதவித்தனர். சமையல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிக பணம் கொடுத்து தனியார் டேங்கர் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் ஆர்ஓ தண்ணீரை வாங்கினர். குடிநீர் முறையாக வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருநின்றவூர் - புதுச்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
+
Advertisement