புழல், நவ.25: செங்குன்றம் அருகே காதல் திருமணம் செய்த இளம் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி காந்திநகரை சேர்ந்த ராகுல்(30) என்பவரை காதலித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து, நந்தினி தனது கணவர் குடும்பத்தினருடன் காந்திநகரில், வசித்து வந்தார். நந்தினி 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சரிவர உணவு உட்கொள்ளாததால் அவரது மாமியார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல் நிலைய போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி இறந்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2 மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.



