Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிப்பட்டு பகுதியில் 15 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது 2 கிராமங்களை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்: வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம், பொதுமக்கள் பாதிப்பு

பள்ளிப்பட்டு, அக்.25: பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய 15 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், அங்குள்ள 2 கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வீட்டு உபயோக பொருட்கள் நாசமடைந்தது. திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் பள்ளிப்பட்டு பகுதியில் விடிய விடிய 15 செ.மீ., கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெடியம் ஊராட்சி வெங்கம்பேட்டை அருந்ததி காலனிக்கு அருகில், நீர்வரத்து கால்வாயில் காற்றாற்று வெள்ளம் அதிகரித்து கிராமத்தில் சூழ்ந்தது.

இதில், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் நள்ளிரவில் வெள்ளம் புகுந்ததால், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணானது. அதே நேரத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். மழைநீர் புகுந்த வீடுகளில் தத்தளித்த குடும்பத்தினரை கிராம மக்கள் மீட்டு அங்குள்ள பள்ளியில் தங்க வைத்தனர்.

அதேபோல், கர்லம்பாக்கம் ஊராட்சி, வெங்கடாபுரம் காலனியில் காற்றாற்று வெள்ளம் நீர்வரத்து கால்வாயில் நிரம்பி கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை மூழ்கடித்தது. இந்த கனமழைக்கு பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், புது தெருவில் வசித்து வரும் ராணி என்பவரின் வீடு மேல் கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த ராணி(55) என்பவரின் கால் முறிந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் சாலையோரத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில், வருவாய் ஆய்வாளர் அலுவலக சுற்றுச்சுவர் சாய்ந்தது. பல்வேறு கிராமங்களில் மழைநீர் தேங்கியதால் கிராமமக்கள் அவதி அடைந்தனர்.