பொன்னேரி, அக்.25: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் மழையால், இந்த ஊராட்சிகளில் உள்ள குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லூர், அத்திப்பட்டு, கொண்டக்கரை, நாலூர், வண்ணிப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மீஞ்சூர் ஒன்றியம், வல்லூர் ஊராட்சியில் உள்ள மாந்தோப்பு காலனி பகுதி குடியிருப்பு பகுதி மற்றும் தனியார் பள்ளி அருகிலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் பன்றிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்துள்ளது. இதனால், அவ்வழியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும், தண்ணீரில் ஊர்ந்து செல்லும் பன்றிகளால் நோய்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
+
Advertisement
