திருத்தணி, செப்.25: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆலை சார்பில் கடந்த 1994ம் ஆண்டு தேசிய கூட்டுறவு ஆணையத்திடம் ரூ.5 கோடி கடன் பெறப்பட்டது. இதில், வட்டியுடன் ரூ.9.50 கோடி கடன் செலுத்த வேண்டும் என்று தேசிய கூட்டுறவு ஆணையம் கூறியநிலையில், தமிழ்நாடு அரசு, தேசிய கூட்டுறவு ஆணையம் இணைந்து லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடி கடன் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், 38 கோடி கடன் செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஜப்தி செய்யப்படும் என்ற தேசிய கூட்டுறவு ஆணையத்தின் நடவடிக்கைளை கண்டித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாலங்காட்டில் உள்ள ஆலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன், மாவட்ட பொருளாளர் பெருமாள், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், நாபளூர் ஸ்ரீநாத் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று ஒன்றிய அரசின் கூட்டுறவு ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.