திருவள்ளூர், செப்.24: திருவள்ளூர் மாவட்டத்தில் 151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, வயது வரம்புரை தொடர்பாக திருத்தம் வெளியிடப்படுள்ளது. அதன்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று, பணி நியமனம் மேற்கொள்வது தொடர்பாக 23.07.2025 அன்று தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதில், வயது வரம்பு தொடர்பாக கீழ்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.
1.07.2025 அன்று பொதுப்பிரிவினர் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 37 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவையினர் 39 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆதரவற்ற விதவையினர் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதனை, தவிர வேறு திருத்தங்கள் ஏதுமில்லை. திருத்தத்திற்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 151 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை https://tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து 8.10.2025 வரை மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.