பெரியபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஊத்துக்கோட்டை, செப்.24: பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் கிராமத்தில் இ-சேவை மையத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வசதிக்காக இ-சேவை மையம் கட்டப்பட்டது. இந்த, இ-சேவை மைய கட்டிடம் பயன்படாத நிலையில், அதை விவசாயிகள் பயன்படுத்த நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டது.
இந்த, நெல் கொள்முதல் நிலையத்தினை கூரம்பாக்கம், கோட்டைகுப்பம், மஞ்சங்காரணை, அத்திவாக்கம், ஆமிதாநல்லூர், ஆலப்பாக்கம், மாம்பள்ளம், அத்திவாக்கம், வெங்கல், நெய்வேலி பெருமுடிவாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இங்கு செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் தரம் பிரிக்கும் இயந்திரத்திற்கு அங்குள்ள ஊழியர்கள் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைக்கையை ஏற்று, அத்தங்கிகாவனூர் கிராமத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும், நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதால், புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.