பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்: அதிகம் பாதிக்கும் 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளூர், அக்.23: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதியாக
47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் ஏற்படும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்தார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரதாப், நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டத்தில் நேற்றில் இருந்து எல்லா குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. நேற்றைக்கு பொறுத்த வரைக்கும் இரவு 2 இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக ஊத்துக்கோட்டை மற்றும் ஆவடி ஆகிய 2 பகுதிகளில் மழை பெய்தது. மற்ற இடங்களில் சராசரியாக 62-70 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 7.5 சென்டி மீட்டராக மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்னாடியே மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிற 47 பகுதிகளுக்கும் தனியாக ஒரு அலுவலர்களை நியமித்து, அந்த அலுவலர்கள் மூலமாக அனைத்து துறையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டதனால் அந்த பகுதிகள் அதிகமாக தண்ணீர் தேங்கவில்லை. ஒன்று, இரண்டு இடங்களில் ஒரு அடி, அரை அடி இருக்கிற தண்ணீரையும் விரைவில் வெளியேற்ற இயந்திரங்கள் எல்லாத்தையும் தயார் செய்து, அலுவலர்களும் தயார் நிலையில் களத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4480 தன்னார்வலர்கள் மூலமாக அந்தந்த பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து அவர்களை அந்தந்த பகுதிக்கு முதல் முறையே இந்த வருடம் பயிற்சி கொடுத்து தங்க வைத்திருக்கிறோம். ஏன்னென்றால் அரசு நிர்வாகம் ஒரு இடத்தில் இருக்கும் போது அவர்கள் உள்ளுர்களில் இருக்கும் இடங்களில் உடனடி நிவரானம் அவர்கள் பண்ணிக்கலாம். தன்னார்வலர்கள் மூலமாக பயிற்சி கொடுத்து அந்தந்த இடங்களில் தங்க வைத்துள்ளோம். அதுபோல ஆப்டமித்ரா என்ற தன்னார்வலர்கள் நம்ம ஒன்றிய அரசு மூலமாக 500 நபர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களையும் அந்தந்த பகுதிகளில் தங்க வைத்துள்ளோம்.
காவல்துறை எஸ்டிஆர்எப் குழுக்களும், ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கியமான தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பேரிடர் மேலாண்மை சிறப்பு குழு சென்னையில் இருந்து வந்து திருப்பாலைவனத்தில் ஏதாவது அவசர நிலை என்றால் கால் பண்ண உடனே போற அளவுக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். அதுபோக நமக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் 5, நிரந்தர தங்குமிடங்கள் 3. பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய தாலுகாவில் கட்டி அந்த இடங்களுக்கான அடிப்படை வசதிகளை பார்த்து அங்கே ஏதாவது மக்களுக்கு ரொம்ப அதிகமாக தண்ணி வந்துச்சுன்னா அந்த இடங்களில் அவங்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்.
அவங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கழிப்பறை வசதிகள், அவர்களுக்கு உணவு சமைக்கிறதுக்காக கூட்டுறவுத் துறை மூலமாக தேவையான ரேஷன் பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துள்ளோம். கடந்த பத்து பதினைந்து வருடங்களாக தூர்வாராத எல்லாத்தையும் இந்த தடவை சமூகப் பொறுப்பு நிதி மற்றும் தனியார் நிறுவனம் உதவியோட 130 கிலோ மீட்டரில் 95 கிலோ மீட்டர் இதுவரைக்கும் தூர் எடுத்துள்ளோம். இன்னும் 25-35 கிலோமீட்டர் இன்னும் இரண்டு வாரத்திற்குள் அதையும் முழுமையாக தூர் எடுக்கப்பட்டு ஒரு நல்ல ஒரு விடிவா அந்த இடங்களில் இருக்கும்.
இந்த வருடம் புதுசா கட்டுப்பாட்டறை புனரமைச்சி அனைத்து துறை அலுவலர்களும் இருக்கிற மாதிரி செய்துள்ளோம். மாநில கட்டுப்பாட்டு அறை 1077, மாவட்ட கட்டுப்பாட்டறையின் மூலம் 24*7 அலுவலர்கள் அங்கிருந்து வர புகார்களை ரெகார்ட் பண்ணிட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அவங்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கிற பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய 4 நீர்த்தகங்களில், பூண்டியில் 35 அடியில 33 அடி நெருங்கி வந்துவிட்டது. மழை அதிகமாக இருக்குமானால் கொஞ்சம் கொஞ்சமாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
என்னோட வேண்டுகோள் என்னவென்றால் பூண்டி ஆய்வின் போது நிறைய மக்கள் அங்க செல்பி எடுக்கிறது உள்ள எட்டி பாக்குறது குழந்தைகளுக்கு கூட்டிட்டு போறது இந்த மாதிரி விஷயங்கள் நிறைய பேர் பண்றது பார்க்கிறோம். அதை தயவு செய்து பெற்றோர்களும் குழந்தைகளும் அந்த விஷயங்கள் செய்ய வேண்டாம். பெற்றோர் யாரும் குழந்தைகள் அந்த இடத்தில் கூட்டிட்டு போக வேண்டாம். எல்லாரும் நம்ம வீட்டில் பாதுகாப்பாக இருக்கணும். இன்றைக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவித்தது எதுக்குன்னா வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கணும்ங்கறதுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குழு காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பான விஷயங்கள், மாசு கலந்த தண்ணீர் மூலம் வரக்கூடிய நோய்களை தடுக்கணும் என்பதற்காக அந்த இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இன்றைக்கு 75 இடங்களில் மருத்துவ முகாம் போட்டுட்டு இருக்கோம். அதேபோல தண்ணீர் தேங்கி இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த 50 எச்பி, 30 எச்பி 20 எச்பி மின்சார மோட்டார் இயந்திரங்கள், மரம் அறுக்கும் தானியங்கி இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள் வாகனங்கள் தேவையான இடங்களில் நிலைநிறுத்தி உள்ளோம். பூவிருந்தவல்லி, யமுனா நகர் பகுதியில் அதிகமாக தண்ணி எப்பவுமே நிற்கும். முதலில் தண்ணி வந்ததுக்கு அப்புறம் பம்ப் பண்ணாம இப்பவே தண்ணி வர வர நீர் வெளியேற்றப்படுவதால் பாதிப்பு குறைவாக இருக்கும். இன்னைக்கு காலையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதனால் அந்த பகுதியில் பாதிப்பு இல்லாமல் இருந்தது. வர புகார்களை உடனே வந்து நிவர்த்தி பண்ணிட்டு இருக்கோம், ஊடகங்கள் மூலம் நிறைய புகார்கள் வருகிறது. அதையும் உடனடியாக தெரிந்துக் கொண்டு அதற்கான தீர்வுகளை கொடுத்துட்டு இருக்கிறோம். மாவட்டத்தில் இருக்கிற அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையில் அவரின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் புகார்கள் தொடர்பாக கேட்டறிந்து, அதற்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார். நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) மதன் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்கள் உடனிருந்தனர்.