Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் 24 மணி நேரமும் மின் பாதிப்பு குறித்து மின்னகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

திருவள்ளூர், அக்.23: மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மின் பாதிப்புகள் குறித்து 24 நேரமும் இயங்கும் மின்னக மையத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என்று மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம், மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடாமலும், அருகில் செல்லாமலும் இருப்பதோடு உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும், மின் மாற்றிகள் மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது, அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கிய இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது, குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது, டிரான்ஸ்பார்மர்கள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ, கயிறுகட்டி துணிகளை உலர்த்தகூடது. அவற்றில் கால்நடைகளை கட்டக்கூடாது, இடி, மின்னலின்போது மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக்கூடாது. நுகர்வோர்கள் தன்னிசையாக மின் மாற்றிகளில் பிஸ் போயிட்டால் டிரான்பார்மரில் ஏறி மாற்றக்கூடாது. இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும்.

மேலும், வீட்டினில் எர்த்தினை முறையாக பராமரிக்க வேண்டும், வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனடியாக உலர்ந்த ரப்பர் காலணியே அணிந்து மெயின் சுவிட்ச்சை நிறுத்த வேண்டும். மெயின் சுவிட்ச்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின்பழுது பார்க்கக்கூடாது. பவர் பிளக்கினில் கைவிரல், குச்சி, கம்பிபோன்றவற்றை நுழைக்கக் கூடாது. சுவிட்சை நிறுத்திய பிறகே மின் விசிறி, அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை இணைக்கவோ, துண்டிக்கவோ வேண்டும், செல்போன்கள் சார்ஜில் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம், மழைக்காலத்தில் பொதுமக்கள் மின் விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து, மின் பாதிப்பு ஏற்படாமல் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின்சாரம் குறித்து அனைத்து புகார்களையும் 24X7 முழுநேரமும் இயங்கும் மின்னகம் 94987 94987 என்ற புகார் மையத்திற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.