திருத்தணி, அக்.23: திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நாள் முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர் மழைக்கு நீர் பாசன துறைக்கு சொந்தமான 26 ஏரிகள் முழுமையாக நிரம்பியது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று நாள் முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சொர்ணவாரி பட்டத்தில் திறக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பெரும்பாலும் கொள்முதல் முடிந்து மூடப்பட்டு வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள. நெல் மூட்டைகள் மழைக்கு நனைந்து வீணாகும் நிலை உள்ளது. திருத்தணி பகுதியில் மழைக்கு பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. திருத்தணி கோட்டத்தில் நீர்பாசனத்துறைக்கு சொந்தமான 26 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது.
மொத்தம் 71 ஏரிகளில் ஆர்.கே.பேட்டையில் 16 ஏரிகள், திருத்தணியில் 7 ஏரிகள் பள்ளிப்பட்டில் 3 ஏரிகள் நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. திருத்தணி நகரை பொறுத்தவரை நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பைபாஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல், காந்தி சாலை, ஆறுமுகசாமி கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதிவாசிகள் அவதி அடைந்தனர். கச்சேரி தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகள் சிரமம் அடைந்தனர்.