பள்ளிப்பட்டு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனை ? டிராக்டர் வருகையால் பரபரப்பு; காவல் நிலையத்தில் புகார்
பள்ளிப்பட்டு,செப்.23: பள்ளிப்பட்டு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரில் நெல் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடிவைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்திற்கான நெல் அறுவடை செய்து விவசாயிகள் முன்பதிவு செய்து தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆந்திர எல்லைப் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயிகள் என்ற போர்வையில், சில சமூக விரோதிகள் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜுபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கடந்த 3 நாட்களாக தேங்கியுள்ளன. விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்கி பாதுகாப்பாக வைக்க இட வசதி இல்லாததால், நேற்று நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை டிராக்டர்களில் தார்ப்பாய் மூடி விவசாயிகள் விற்பனைக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் நேற்று காலை ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரில் நெல் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடிவைக்கப்பட்டிருந்ததை பார்த்த பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவீந்திரா மற்றும் விவசாயிகள் ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டர் யாருடையது, எங்கிருந்து வந்தது என்று நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விசாரித்தனர். அதற்கு எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கப்பட்டது. அம்மனுவில் பொம்மராஜுபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டர் எங்கிருந்து வந்தது? அது யாருடையது என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரில் நெல் மூட்டைகள் இருந்ததால் அப்பகுதி விவசாயிகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.