பள்ளிப்பட்டு-சோளிங்கர் இடையே நெடுஞ்சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள நிழல் தரும் மரங்கள்: வாகன ஓட்டிகள் நிம்மதி பயணம்
பள்ளிப்பட்டு, செப்.23: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரங்களில் அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதை காண முடிந்தது. இயற்கை நிறைந்த மரங்கள் தூய்மையான காற்று தருவதோடு, வாகன ஓட்டிகளுக்கு சில்லென்று நிழல் கொடுத்ததால், சாலையில் மகிழ்ச்சி நிறைந்த பயணங்கள் அமைந்திருந்தன. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால், சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு சாலைகளின் முகவரியாக பசுமை வனம் போல் நிமிர்ந்து காணப்பட்ட மரங்கள் வெட்டப்படுவதால், சாலைகள் தனது இயற்கையான அழகை இழந்து மொட்டையாக காணப்படுகிறது.
இதன் காரணமாக சாலைகளின் இருபுறமும் திறந்த வெளியாக இருப்பதால் வெயில் பயணிகளை வாட்டி வதைத்து வருவதோடு, சுற்றுச்சுழல் பாதிப்பு, சராசரி மழை அளவு குறைந்து, மரங்களில் வாழ்ந்து வந்த ஏராளமான பறவைகள் அழிந்து வருகின்றன. மேலும், வாகன ஓட்டிகளின் பயணமும் பெரும் சவாலாக மாறி உள்ளது. இப்படி மரங்கள் நிறைந்த சாலைகளை பார்ப்பதே அரிதாக விட்ட காலகட்டத்தில், பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலைக்கு இருபுறமும் வளர்ந்துள்ள அடர்ந்த மரங்கள் வாகன ஓட்டிகளை கவர்ந்து வருகிறது. சில்லென்று இயற்கையான காற்று வீசுவதுடன், அச்சாலையில் சென்று வரும் வாகன ஓட்டிகள் குளிர் பிரதேசத்தில் பயணிப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. இதனால், மகிழ்ச்சி நிறைந்த பயணமாக அமைந்திருப்பதாக அச்சாலையில் சென்று வரும் பயணிகள், வாகன ஓட்டிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
தனி கவனம் செலுத்தும் நெடுஞ்சாலைத்துறை
பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் உள்ள மரங்களை முறையாக பராமரித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சாலை விரிவுப்படுத்தும் பணிகளுக்காக சாலைகளுக்கு இருபுறமும் மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பராமரிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிப்பட்டு-நகரி மாநில நெடுஞ்சாலை, சோளிங்கர்- சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வருவதாகவும், இதனால் இச்சாலைகளில் அதிகளவில் மரங்கள் பசுமையாக காட்சி அளிப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.