திருத்தணி, ஆக. 23: தினகரன் செய்தி எதிரொலியாக திருத்தணி அருகே குவாரியில் கற்கள் வெட்டி எடுக்க தற்காலிக தடை விதித்து தாசில்தார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். திருத்தணி அருகே, சூரிய நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெஜலட்சுமிபுரம், எல்லம்பள்ளி பகுதியில் 2 கல்குவாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அதிக சத்தத்துடன் கூடிய வெடி பொருட்களை பயன்படுத்தி பாறைகள் வெட்டி எடுத்து, தினமும் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு கட்டுக் கல், ஜல்லி, சிப்ஸ். எம்.சாண்ட் விற்பனைக்கு ஏற்றி செல்லப்படுகிறது. அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகளால் விரைவாக சாலை சேதமடைந்து வருகிறது. விதிமீறி அதிக அளவில் மலையிலிருந்து கற்களை வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதால், எல்லம்பள்ளி, கெஜலட்சுமிபுரம் சாலைகள் விரைவாக சேதமடைந்து தார் முழுமையாக பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், எல்லம்பள்ளி, கெஜலட்சுமிபுரம், எல்லம்பள்ளி காலனி, கிருஷ்ணசமுத்திரம் காலனி ஆகிய 4 கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது. இதனிடையே, எல்லம்பள்ளி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கல்குவாரிக்கு சொந்தமான டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி தாசில்தார் மலர்விழி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விதிமீறி அதிகளவில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து இன்று முதல் குவாரியில் கற்கள் வெட்டி எடுக்க தற்காலிக தடை விதிப்பதாகவும், குவாரியில் அதிகாரிகள் முறையாக அளவீடு செய்த பின்னர் தான் கல்குவாரி தொடர்ந்து செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.