திருவள்ளூர், நவ.22: செம்பரம்பாக்கம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரம், நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் 3.0 விழிப்புணர்வு பேரணி மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் உத்தரவின்பேரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் பிரிதிபா தலைமை தாங்கினார். மாவட்ட மலேரியா அலுவலர் (பொ) ஆனந்த், பள்ளிகளின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் கிறிஸ்டி சாராள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மருத்துவ மேற்பார்வையாளர் கோடீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொ) விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு புகை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினர். முன்னதாக, இராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் இணை பேராசிரியர் பூங்கொடி தலைமையில், செவிலியர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர், அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
+
Advertisement


