Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஞ்சா விற்பனை தகராறில் வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது: தப்பி ஓடியபோது 2 பேருக்கு கால் முறிவு

திருவள்ளூர், ஆக.22: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், சிட்றம்பாக்கம் கிராமம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஓபுல். இவரது, மகன் சேது (எ) சேதுபதி (25). கூலி தொழிலாளியான இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 19ம் தேதி மாலை தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடி குண்டை சேதுபதியின் மீது வீசியுள்ளனர். இதனால் பதறிப்போன அவர் தடுத்தபோது, அவரது வலது கையில் பட்டு, பலத்த சத்தத்துடன் நாட்டு வெடி குண்டு வெடித்து சிதறியது. இதில், அவரது வலது கை முழுவதுமாக சேதமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

பலத்த காயமடைந்த சேதுபதியை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், போலீஸ் டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் கடம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் மீது நாட்டு வெடி குண்டு வீசிய 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சிட்றம்பாக்கத்தை சேர்ந்த சேதுபதி தரப்பினருக்கும், பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியைச் சேர்ந்த முகேஷ், நரசிங்கபுரம், களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரிவினருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது சம்பந்தமாக கடந்த ஜூன் 23ம் தேதி தகராறு ஏற்பட்டது.

அப்போது, சேதுபதி தரப்பைச் சேர்ந்தவர்கள், முகேஷ் தரப்பினரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சேதுபதி தரப்பினரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, சேதுபதி தரப்பினர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். முகேஷ் தரப்பினர் ஏற்கனவே தங்களை சேதுபதி தரப்பினர் வெட்டியதற்கு பழிதீர்க்கும் விதமாக கடந்த 19ம் தேதி சேதுபதி மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு, கொலை செய்ய முயன்று தப்பிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், காரில் தப்பியவர்கள் ஆவடி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த திருவள்ளூர் அடுத்த இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20), நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அபிமன்யு (25), பாபா (எ) வினோத் (25) ஆகிய 3 பேரையும், நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அப்போது, போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற அபிமன்யு, பாபா (எ) வினோத் ஆகியோர், தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. இதில் முகேஷ் மீது அடிதடி, கஞ்சா வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், வினோத் என்ற பாபா மற்றும் அபிமன்யூ ஆகிய இருவர் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிங்கபுரத்தில் பேக்கரியில் பெண் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு உட்பட 5 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், 3 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பேரம்பாக்கம் காலனியை சேர்ந்த பிரவீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.