பொன்னேரி, நவ.21: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் கூட்டு பயிற்சியான சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திைக நிகழ்ச்சி இன்று மாலை வரை நடைபெறுகிறது. சாகர் கவாச் என்பது இந்தியாவின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் ஒரு கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சி ஒத்திகை ஆகும். இது இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மாநில போலீஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கம் கடலோரப் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதாகும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சாகர் கவாச் கூட்டுப் பயிற்சி நேற்று காலை தொடங்கியது. இன்று மாலை வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாகர் கவாச் தொடங்கிய நிலையில் பழவேற்காட்டில் காவல் உதவி ஆணையர் சங்கர் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பழவேற்காட்டில் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய இடங்களான போலாச்சி அம்மன் குளம் செக் போஸ்ட், ஆண்டார் மடம் பேருந்து நிலையம், பழவேற்காடு புற காவல் நிலையம், லைட் ஹவுஸ் கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று, தமிழ்நாடு கடலோர காவல்படை சார்பில் ஆய்வாளர் சபாபதி தலைமையிலான குழுவினர் காட்டுப்பள்ளி துறைமுக பகுதி மற்றும் பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.


